Friday, March 31, 2006

மார்கழி நினைவுகள்

மார்கழி மாதக் குளிரில்
அதிகாலை நான்கு மணிக்கு
நடுக்கத்தைப் பொருட்படுத்தாமல்
தலைக்கு மஃப்ளர் கட்டிக்கொண்டு
"தெருவில் யார் கோலம் பெரியது" என்ற
போட்டியுடன் அவரவர் அம்மா போடும் கோலத்திற்கு
கலர் அடிப்போம் நாங்கள்.
வாண்டுகள் ஒன்று கூடி
ஒவ்வொரு கோலத்தையும் பார்வையிடுவோம்.
தெருவே வாய் பிளக்கும்படி
கோலம் போடுவாள் கோமதி அக்கா.
மயில் கோலம்,சங்கு கோலம்,சிக்கு கோலம் என
விதம் விதமாக இருக்கும்.
என் அம்மாவும்
என்னவெல்லாமோ போட்டுப் பார்த்து
ஓய்ந்தேவிட்டாள்
கோமதியக்கா கோலத்துடன் போட்டியிட முடியாமல்.
மணம் செய்துகொண்டு
ஊரை விட்டே கிளம்பிய அக்காவிடம்
கோல நோட்டை வாங்கி வைத்துக் கொண்டாள் அம்மா.
இத்தனை புள்ளி இத்தனை வரிசை என்று
அழகாக எழுதி வைத்திருந்தாள் அக்கா.
அதன் பிறகு வந்த மார்கழியில்
எங்கள் வீட்டுக் கோலமே நன்றாக இருந்ததை
சொல்லவும் வேண்டுமா....???

கால மாற்றத்தால் மகளிரும்
அதிகாலைத் துயில் எழாமல்
சீரியல்களில் மூழ்கிப் போயினர்.
கடந்த மார்கழியில் ஒரு நாள்
ஆறு மணிக்கு எழுந்து
வெளியே சென்று பார்தேன்.
ஒரு சில வீடுகளில்
சம்பிரதாயத்துக்காக
சின்ன 'சிக்கு' கோலம்.
அவசரமாக ஓடிச் சென்று
கோமதியக்கா நோட்டைத் தேட
தமிழ்ப் பண்பாடின் சில வழக்கங்கள்
மறைந்து கொண்டு வருவதன் அடையாளமாக
செல்லரித்துக் கிடந்தது அது.

Tuesday, March 28, 2006

சலூன்

கல்லூரி நாட்களில்
சொல்லி வைத்த மாதிரி
சனிக்கிழமை மதியம்தான் முடி வெட்டுவேன்.
மூன்று வருடமாக அதே கடையில் வெட்டினாலும்
ஏனோ இம்முறை கடைக்குள் நுழையும்போது
மனதில் சிறு நடுக்கம்.
நான்காண்டு படிப்பு முடிந்து
கல்லூரி விடுதியை
ஒவ்வொருத்தராகக் காலி செய்ய
எஞ்சியிருந்தவர்களில் நானும் ஒருவன்.

முடி வெட்டுபவர் வயதானவர்.
அவர் முடி வெட்டும் அழகே அலாதியானது.
தலையைக் கோதிவிட்டு
'புஸ் புஸ்' என்று தலையில் நீர் தெளித்து
105.8 சூரியன் FM பாடல் பின்னணியில்
'கரிச் கரிச்' என்று
கத்திரிக்கோலால் தாலாட்டு பாடுவார்.
நானும் சில சமயம் அசந்து விடுவேன்.
'பொறுமை'... இது ஒன்றுக்காகவே
நான் வாடிக்கையானேன்.
பார்த்துப் பார்த்து
தன் தலையாகவே நினைத்து
குறைந்தது 2 மணி நெரம் எடுத்துக்கொள்வார்.

கடைசி தடவை எனக்கு வெட்டுகிறோம்
என்று தெரிந்ததாலேயே
அன்று கூடுதலாக 15 நிமிடம் ஆனது.
காசு கொடுத்ததை வாங்கியவர்
'என்ன மறந்துடுவிங்களா….?' என்று அப்பாவியாகக் கேட்க
ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு
'இல்லை' என்னும் விதமாகத் தலையசைத்தேன்.
விடுதி வரை எண்ணங்கள் அலை மோத
தடுமாறியபடி நடந்தேன்.
வாழ்க்கையில் எத்தனை விதமான மனிதர்கள்.....
புதுப்புது வண்ணங்களைக் குழைத்து
தினம் தினம் 'ஹோலி' பண்டிகை போல்
பல குணங்கள் கொண்ட மனிதர்கள்.

இப்பொழுது அந்தக் கடை அங்கு இல்லாவிடினும்
கோவையில் அவ்விடத்தைக் கடக்கும்போதெல்லாம்
யாருக்கும் இல்லாமல் எனக்கு மட்டும் கேட்கிறது
'கரிச் கரிச்' என்ற சத்தம் மட்டும்.

பயணம்

கத்திரி வெய்யிலின் உக்கிரம்
என் மண்டையைப் பிளக்க
சென்னை செல்வதற்கு
புதுவை பேருந்து நிலையத்தில் நின்றேன்.
ECR பலகையுடன் ஒன்று உள்ளே வர
தேன் கூட்டைச் சுற்றி மொய்க்கும்
தேனீக்கள் போல்
பேருந்தைச் சுற்றி மக்கள் கூட்டம்.
அடித்துப் பிடித்து ஏறும் முன்
கைக்குட்டையும் பைகளும் இருக்கைகளில்.
என் திறமையை நொந்து கொண்டே
நிற்கலானேன் இடிபாடுகளுக்கிடையில்.

கூட்டம் பிதுங்கி வழிந்தது.
பாதி தூரம் செல்லும் முன்
2 வயது குழந்தை வீறிட்டு அழ
காரணம் புரியாமல் தாய் பரிதவிக்க
'ஒன்று'க்குச் சென்றுவிட்டு ஓய்ந்தது அது.
குழந்தை என்று கூட பாராமல்
அணிந்த T-சர்ட்டில் கொஞ்சம் பட்டுவிட்டதால்
திட்டித் தீர்த்தான்
3 குழந்தைக்குத் தகப்பன் போலிருந்தவன்.

சிறிது நெரம் கழித்து
அரும்பிய மீசையின் வேகத்தில்
கூட்டத்தைப் பகடையாக்கிய ஒருவனை
வெகுண்டெழுந்த ஒரு புதுமைப் பெண்
'பளார்' என்று விட்டாள் ஒன்று.

திடீரென்று படிகளின் பக்கம்
'க்வாக்…..' என்ற சத்தம்.
சாம்பார், ரசம், தயிர் கலந்த
ஒரு ‘modern painting’ .

அனல் காற்றின் வெம்மை
அனைவரது முகத்தில் வியர்வையானது.
'தண்ணீர் தண்ணீர்' என்று ஒருவன் கதற
காதில் வாங்காதது போல் சிலரும்
வைத்துக்கொண்டே கையை விரித்த பலரும்
'மனித நேயம்' செத்துப் போனதைப் பறைசாற்றினர்.
மயங்கி விழப்போனவனுக்கு
ஒரு வயதான முதியவர்
கொஞ்சம் புழுதி படிந்த பாட்டிலை நீட்ட
வாங்கி 'மடக் மடக்' என்று நொடியில் குடித்துவிட்டு
நன்றி சொல்ல வார்த்தை எழாமல்
தடாலென்று காலில் விழுந்தான் அவன்.

மானுடம் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு
சாட்சியானார் அப்பெரியவர்.
ஆமோதிப்பதாகவே 'சட சட' வென
கொட்ட ஆரம்பித்தது மழை.

பேரம்

தீபாவளி சமயத்தில்
பக்கத்து வீட்டுக்காரியிடம் கடன் வாங்கிய
தங்க வளை டாலர் செயின் சகிதமாக
மற்றவர்களின் கவனம் கவர
செருப்பை 'டப் டப்' என்று அடித்துக் கொண்டே
புடவை எடுக்க நுழைந்தாள் ஒருத்தி.
கடையைத் தலைகீழாகப் புரட்டியும்
திருப்தி அடையாமல்
அங்கும் இங்கும் நோக்க
இன்னொருத்தி எடுத்து வைத்த புடவை
பிடித்துப் போக
அவளும் அதே டிசைனில் எடுத்துவிட்டு
ரூ.300 மதிப்புள்ள சேலைக்கு
500 ரூபாய்த் தாளைப்
பெருமையுடன் நீட்டிவிட்டு வெளியே வந்தவள்
5 ரூபாய் பெறுமானமுள்ள ஒரு முழம் பூவை
ரூ.4.50 க்கு பூக்காரியிடம் பேரம் பேசினாள்
நாம் அன்றாடம் காணும்
ஒரு நடுத்தர குடும்பத்தலைவி.

நான் ஒரு குழந்தை

கழுகுமலை முருகன் கோயிலில்
பெரியவர்கள் பரபரப்பாக வேலை செய்ய
குழந்தைகள் அங்கும் இங்கும் ஓட
சிரிப்பும் கும்மாளமுமாக
ஊர் கூடி வாழ்த்த வந்திருந்தது
என் அக்காள் திருமணத்திற்கு.

பட்டு வேட்டி சட்டையுடன்
மாலையைத் தூக்கிக்கொண்டு நான் செல்கையில்
அங்கே ஒரு 20 வயது குழந்தை
6 வயது குழந்தைக்கு 'முத்த மழை' பொழிந்தது.

எதற்கு முத்தம் கொடுத்தாள் என்று நான் கேட்க
'சொல்ல மாட்டேன் போ….' என்று
முரண்டு பிடித்தது குழந்தை.
கையில் இரண்டு மிட்டாய் வைத்தவுடன்
உண்மை துலங்கியது எனக்கு...
'நீங்க புடவையில ரொம்ப அழகா இருக்கீங்க'
என்று குழந்தை அவளிடம் சொல்லியதாம்...!

என் மனம் குறுகுறுக்க ஆரம்பித்தது.
என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே நடக்கையில்
அவள் கைகளையே 'வடம்' என்று பிடித்து
குழந்தைகள் தங்கத் தேரை இழுத்து வந்தனர்.
நான் வழிமறித்து , குழந்தைகளை விரட்டினேன்.
என்ன வேண்டும் என்பது போல் என்னை நோக்கினாள்.
'உங்க பேர் தேவதையா..??' என்று நான் கேட்டவுடன்
மறைந்திருந்த வெட்கம் வெளிப்பட்டு
ஓடோடிச் சென்று மீண்டும் முத்தமழை பொழிந்தாள்
அதே குழந்தைக்கு....
ஏக்கப்பெருமூச்சுடன் அன்று நான் ஆசைப்பட்டேன்
குழந்தையாக மாற வேண்டும் என்று.

பாசக்காரப் பசங்க

நிச்சயம் முடிந்த கையுடன்
அவளைத் தொடர்பு கொள்ளக் கூடாதென்று
தடை விதித்தார் அப்பா.
அவளது கிராமத்தில்
தொலைக்காட்சியே ஒன்றிரண்டு வீட்டில் தான்..
அப்புறம் செல்லிடப் பேசிக்கு எங்கே செல்வது.....??

வீட்டுக்குத் தெரியாமல்
ஒரு கூடை நிறையக் கனிகள் கொண்டு
எங்கள் மரத்தில் கனிந்ததென்று
மாமா நம்பும்படியாகவே பொய்யைச் சொன்னேன்.
கூடையைத் தூக்க வந்தவளுக்கு
கண்சாடை காட்டிவிட்டு அரைமணியில் கிளம்பிவிட்டேன்.

என் சைகை புரிந்திருந்தால்
4 மணிக்கு ஊர் எல்லைக் கிணற்றடிக்கு வரவேண்டும்.
ம்ம்...என்ன செய்வது…??.... அவள் பட்டிக்காடு.
கிணற்றின் விளிம்பில் நின்று
கல்லெறிந்தேன் அலைகளை உருவாக்க.
என் கண்களை யாரோ பின்னிருந்து பொத்த
வந்தது அவள்தானென்று காட்டிக் கொடுத்தது
அவள் கைகளின் மென்மை.

அவளின் சாதுர்யத்தை வியந்து கொண்டே திரும்புகையில்
சிறு கல் விழுந்தது என் தலையில்.
யாரென்று மேலே பார்ப்பதற்கும்
அவள் பதறியடித்து ஓடுவதற்கும் சரியாக இருந்தது.
அங்கே மரத்தின் மேல்
மாங்காயைக் கடித்துக்கொண்டு
காலை ஆட்டியபடியே சிரித்தனர்-
என் நண்பர்கள்.
என் செய்வேன் நான்….??
"பாசக்காரப் பசங்க" என்று நொந்துகொள்ளத்தான் முடிந்தது.

ஆடாத ஆட்டமெல்லாம்...

மகளிர் தினத்தன்று எழுதினேன்.அம்மா,தங்கை பற்றிய கவிதைகளை மயில் (ம) SK அனுப்பியதால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டும் என்று எழுதியது.
*********************************************

பெண் என்றாலே எனக்கு ஏதோ ஒரு வெறுப்பு;
ராமுவைக் கன்னக்குழியில் விழவைத்த மாதவி--
சோமுவைக் கூந்தலில் பின்னிக் கொண்ட சுந்தரி--
பக்கத்து வீட்டு வாத்தியாரை
முந்தானையில் முடிந்து கொண்ட அவர் மனைவி--
…..ம்….இன்னதென்று காரணம் சொல்லத் தெரியவில்லை.

கல்லூரி விடுதியில் தினம் ஒரு 'தம்'
வேலை கிடைத்தவுடன் வார இறுதியில் ஒரு 'பெக்'
பொழுது போக்க என் நண்பர்கள்
போதாக்குறைக்கு தினம் காலை 'ஜிம்'
ப்ச்… ’bachelor life’ மாதிரி வருமா..??

'மௌனம் பேசியதே' சூர்யாவின்
ஜெராக்ஸ் காப்பியாக நான் உருவானதில்
பொறுக்க முடியாத அம்மா
எனக்கு ஒரு கால்கட்டு போட நினைத்து
அத்தை மகளைப் பெண் பார்க்க அழைத்தாள்.
முடிவை முன்பே அறிந்ததால்
நண்பர்களும் நமுட்டுச் சிரிப்புடன் கூட வந்தனர்.


அவள் எதிரில் வந்து நின்றவுடன்
நிமிர்ந்து நோக்கிய அக்கணத்தில்
இதயம் ஒரு துடிப்பை இழக்க
கவிழ்ந்துகொண்டே சம்மதமாகத் தலையசைத்தேன்;
நண்பர்கள் பேய் அறைந்தது போல் உட்கார்ந்திருக்க
மனசாட்சி என் எதிரில் நின்று சிரிப்பாய் சிரித்தது.

**************************************************

பணி ஓய்வு

அந்தக் காலத்து 10-ம் வகுப்பு என் அம்மா...
ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியையாய் இருந்து
பணி ஓய்வு பெற்றாள் அன்று.
அலுவலக நண்பர்கள்--
தூரம் (ம) நெருங்கிய சொந்தங்கள்--
அக்கம் பக்கத்து வீட்டார்கள்--
என்று ஒரு படையே வந்ததால்
வீடு அல்லோலகல்லோலப்பட்டது.
அத்துணை மனிதருக்கும்
காபி போடுவதில் ஆரம்பித்து
இரவு டிபன் வரை
தனி ஆளாக நின்று
தடபுடலாக இல்லாவிடினும்
வந்தவர்கள் வயிறு நிரம்பும் அளவிற்கு
சிட்டாகப் பறந்து வேலை செய்து வழியனுப்பிவிட்டு
'அப்பாடா....!' என்ற பெருமூச்சுடன்
சோபாவில் சாய்ந்தாள்....
வீட்டு வேலைகளுக்கு --
என்றுமே 'பணி ஓய்வு' பெற முடியாத குடும்பத் தலைவி.

தாவணி கனவுகள்

நாகரிகத்தின் கால்தடங்கள்
என் கிராமத்தில் பதியாத காலம்--
11-ம் வகுப்பு கோடை விடுமுறை
பம்பரம் விடுவதிலும் கிணற்றுக் குளியலிலும்
பஞ்சு மிட்டாய் போல் கரைந்த நேரம்.
ஆதவன் சாயும் அந்திப் பொழுதில்
குளக்கரையோரம் இயற்கையை ரசித்தபடி
நடந்து கொண்டிருந்தேன்...
இள மஞ்சள் தாவணிக்குப் பொருத்தமாக
கறுப்பு கலர் ரவிக்கையுடன்
இடை தொடும் கருநிறக் கூந்தல் காற்றிலாட
என்னை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு
BSA SLR-ஐ மிதித்துக் கொண்டே சென்றாள்
என் அத்தை மகள்.
அவள் சைக்கிள் ஓட்டிய அழகில்
வாயுதேவனும் மதிமயங்க
அவளது தாவணி பின் சக்கரத்தில்
சிக்கிக் கொண்டது.
ஓடிச் சென்று அதை விடுவித்தவுடன்
நாணத்தால் முகம் சிவக்க
வேகமாக உருட்டிக்கொண்டே பறந்துவிட்டாள்.

ம்ம்...அவளுக்குத் தெரியவா போகிறது.?!
தாவணியுடன் சேர்த்து
என் இதயமும் சிக்கிக் கொண்ட சங்கதி.

தபால் பெட்டி

என் சக CIT நண்பன் 'ஜீ'யின் zip அனுபவம் வரிகளாக.
*****************************************************

எந்தப் பெண்ணும் என்னைப் பார்ப்பதில்லை என்று
ஆண்மைக்கு அழகு தரும் மீசையை மழித்துவிட்டு
'இந்தி ஹீரோ' கணக்காக கேன்டீன் முன்பு போய் நின்றிருந்தேன்....
அதோ தூரத்தில் ஒருத்தி சிட்டு போல் வருகிறாள்....ம்ம்….
சீப்பிற்கு மறுபடியும் வேலை கொடுத்துவிட்டு
வலது காலை முன் நீட்டி இடது காலை மடித்து
இரு கைகளையும் பின் கம்பிக்கு முட்டுக் கொடுத்து
ஒயிலாகச் சாய்ந்து நின்றேன்.

கோதுமை நிறத்தாள் பஞ்சாபி பெண் அவள்...
புருவத்தைச் சுருக்கி வித்தியாசமாகச் சிரித்தாள்.
அட…அட...கெட்டப்பின் பலனை எண்ணிக்கொண்டே
அடுத்தவளை எதிர்நோக்க
அங்கே ஒரு பெண்கள் கூட்டம்.
கோலி குண்டுகள் சிதறுவது மாதிரி
'கலகல'வென்ற சிரிப்புச் சத்தம்
நகர்ந்து கொண்டே வந்தது...
சில அடிகள் தள்ளியே அவர்களுக்குள்
'குசுகுசு'வென்று பேசிக்கொண்டே சிரித்தார்கள்.
'இளமை இதோ இதோ' பாடல் என்னுள் ஓடியது.

பெண் போலே தோள் தொடும் சிகையுடன்
70களின் ஸ்டைலை உடையவன் வந்தான்...
'REMO' வென்று நினைப்பு இவனுக்கு…..
ஹ்ம்...'கோமாளி'..நான் கருவிக்கொண்டேன்..
கிட்டே வந்து எனக்கு மட்டும் கேட்கும்படியாக
'Boss…!! Post Box….!!' என்று விஷமமாகச் சிரித்தான்...
பெண்கள் சிரிப்பின் சூட்சுமம் இப்போது புரிய
உண்மையை உணர்ந்தவனாய்
மறைவிடம் நோக்கி நடந்தேன் நான்....கோமாளியாக!!

**********************************************************

CITயில் ஒரு நாள்

சனிக்கிழமை அதிகாலை 8 மணிக்கே குளித்துவிட்டு
நண்பனின் T-சர்ட்டுக்குள் என்னைப் புகுத்திவிட்டு
அழுக்கானால் தான் அழகாகும் ஜீன்ஸையும் அணிந்து
பக்கத்து அறையின் பொது Dஎஒவையும் அடித்து
விடிந்தாலும் விழிக்காத 'மருதமலை'யை விட்டு
அரக்கப் பரக்க ஓடிச் சென்று
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி
போன் பூத் முன் காத்திருந்த
காதலியின் முன்பு நின்ற போது
நொடிப்பொழுதில்
'சொத்'தென்று என் நெற்றியில் விழுந்து
கண்ணாடியில் வழிந்து நின்றது ஒன்று.


'க்ளுக்' என்று சிரித்தவளைச் சட்டை செய்யாது
யாராவது பார்த்துவிட்டார்களா என்று
சுற்றும் முற்றும் பார்த்தேன்...
காக்கைகளின் பரிகாசக் கரைகளைக் கவனியாமல்.


(சும்மா ஒரு கற்பனை தான்...)

***********************************************

காதலர் தினப் பரிசு

காதலர் தினத்தன்று நான் எழுதியது....

***************************************
அடம் பிடித்த அம்மாவை சம்மதிக்க வைத்து
கிண்டல் செய்த தங்கைக்கு முறுவலித்து
ஒரு மாதிரியாகப் பார்த்த அக்காளிடம் அசடு வழிந்து
முறைத்துக் கொண்ட சொந்தங்களைச் சமாதானப்படுத்தி
என்னைப் புரிந்து கொண்ட அப்பாவை மனதில் வாழ்த்தி
நமக்கு விசேடமான காதலர் தினத்தில்
உன்னைப் பெண் பார்க்க வருகையிலே
'தனியாகப் பேச வேண்டும்' என்றாய்.

வீட்டுக்குத் தெரியாமல் காதல் புரிந்த
வசந்த கால உரையாடல்கள் நினைவிலாட
பேசுவதற்கு என்ன இருக்கிறது என்று
தனியறையில் நுழைந்தேன்.

கெஞ்சிக் கேட்ட போதெல்லாம்
என்னை ஏமாற்றிய நீ
காதலர் தினப் பரிசாக
'கடனாக வைத்துக் கொள்ளுங்கள்' என்று சொல்லி
'நச்'சென்று கன்னத்தில் முத்திவிட்டு
வெட்கம் பொங்க ஓடிச் சென்றாய்.
வட்டியோடு முதலும் சேர்த்து எத்தனை என்று
கணக்குப் பார்த்து விக்கித்து நின்றேன் நான்,செய்வதறியாது!!

********************************************************

வெள்ளிக்கிழமை

--------------------------------
அலுவலகமே களை கட்டும்--
நவநாகரிக யுவதிகள்
ஜீன்ஸில் ஒயிலாக நடைபயிலும்--
குலவிளக்கெல்லாம் குத்துவிளக்காகும்—
வெள்ளிக்கிழமையில்
கலிகாலத்தின் கொடுமையென நினைத்து
நான் மட்டும் நல்ல பிள்ளையாக
புவிபார்த்த விழியாக நடக்கையில்
மல்லி மணம் பரப்பி
சரசரக்கும் புடவையில்
சட்டென்று என்னைக் கடந்துசென்றாள்
என்னவள்.
ஒரு கணம் திரும்பிப் பார்த்து
நின்று கொண்டேயிருந்தேன்
என் கற்பைத் தொலைத்து விட்டு.
---------------------------------

சாந்தி

பள்ளிக்கூடத்தில் எழுதியதெல்லாம் சுகமான நினைவுகளாக
வேலையில் சேர்ந்தவுடன் நான் எழுதிய முதல் கவிதை.
*******************************************************

சக்தியுள்ள சாமி என்று வேண்டினேன்
அவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை!!
கோயிலையே சுற்றிக்கொண்டிருக்கிறது என் வேண்டுதல்
சாந்தி(யை) அடையாமல்.

*******************************************************