Tuesday, May 02, 2006

புயல்

வருடம் தவறாமல் உருவாகும்
குறைந்த காற்றழுத்தத் தாழியின்போது
நாங்கள் குடியிருந்தது அசோக் நகரில்.

இரண்டு மூன்று நாட்கள் லீவு என்பதால்
புயல் உருவானால் ஒரே குஷி தான்.
புயல் கரையைக் கடக்கும் முன்
பட்டம் செய்து காத்திருப்போம்.
காற்றின் வேகம் கூடக் கூட
வாயுதேவன் மூச்சுக் காற்றாக
'விஷ் விஷ்' சத்தம் கேட்கும்.
ஓடி ஒளிவோம் அவரவர் வீட்டுக்குள்.

புயல் கடந்து முடித்தால்
ஜாலியாகத் தெருவில் ஓடுவோம்
'ஹோ..' என்று கத்திக்கொண்டே.
மரங்கள் ஆங்காங்கே சாய்ந்திருக்க
பயலுகள் எல்லாம் கிளைகளை ஒடித்து
ஸ்டம்ப் செய்வோம் கிரிக்கட் விளையாட.
தெருத்தெருவாக சுற்றி
ஒடிந்து விழுந்த முருங்கையில்
காய்கள் பறித்து வருவோம்.
வருடம் முழுதும் புயல் வராதா
என்று ஏங்குவோம் நாங்கள்.
புயலின் கோரத்தாண்டவம்
யாருக்கும் தெரிவதே இல்லை
கடலோர கிராமங்களைத் தவிர.

புயல் ஓய்ந்த ஒரு நாளில்
நான் நகர்வலம் வந்தபோது
பின்னிய கூந்தலில் கனகாம்பரம் சூடி
மாநிறத்தில் சிலிர்க்கும் தேகத்துடன்
தென்றல் போல் மிக மென்மையாக
அன்ன நடை பயின்று
என்னைக் கடந்தாள் ஒருத்தி
என் மனதில் ஒரு புயலை உருவாக்கிவிட்டு.....

0 Comments:

Post a Comment

<< Home