சலூன்
கல்லூரி நாட்களில்
சொல்லி வைத்த மாதிரி
சனிக்கிழமை மதியம்தான் முடி வெட்டுவேன்.
மூன்று வருடமாக அதே கடையில் வெட்டினாலும்
ஏனோ இம்முறை கடைக்குள் நுழையும்போது
மனதில் சிறு நடுக்கம்.
நான்காண்டு படிப்பு முடிந்து
கல்லூரி விடுதியை
ஒவ்வொருத்தராகக் காலி செய்ய
எஞ்சியிருந்தவர்களில் நானும் ஒருவன்.
முடி வெட்டுபவர் வயதானவர்.
அவர் முடி வெட்டும் அழகே அலாதியானது.
தலையைக் கோதிவிட்டு
'புஸ் புஸ்' என்று தலையில் நீர் தெளித்து
105.8 சூரியன் FM பாடல் பின்னணியில்
'கரிச் கரிச்' என்று
கத்திரிக்கோலால் தாலாட்டு பாடுவார்.
நானும் சில சமயம் அசந்து விடுவேன்.
'பொறுமை'... இது ஒன்றுக்காகவே
நான் வாடிக்கையானேன்.
பார்த்துப் பார்த்து
தன் தலையாகவே நினைத்து
குறைந்தது 2 மணி நெரம் எடுத்துக்கொள்வார்.
கடைசி தடவை எனக்கு வெட்டுகிறோம்
என்று தெரிந்ததாலேயே
அன்று கூடுதலாக 15 நிமிடம் ஆனது.
காசு கொடுத்ததை வாங்கியவர்
'என்ன மறந்துடுவிங்களா….?' என்று அப்பாவியாகக் கேட்க
ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு
'இல்லை' என்னும் விதமாகத் தலையசைத்தேன்.
விடுதி வரை எண்ணங்கள் அலை மோத
தடுமாறியபடி நடந்தேன்.
வாழ்க்கையில் எத்தனை விதமான மனிதர்கள்.....
புதுப்புது வண்ணங்களைக் குழைத்து
தினம் தினம் 'ஹோலி' பண்டிகை போல்
பல குணங்கள் கொண்ட மனிதர்கள்.
இப்பொழுது அந்தக் கடை அங்கு இல்லாவிடினும்
கோவையில் அவ்விடத்தைக் கடக்கும்போதெல்லாம்
யாருக்கும் இல்லாமல் எனக்கு மட்டும் கேட்கிறது
'கரிச் கரிச்' என்ற சத்தம் மட்டும்.

0 Comments:
Post a Comment
<< Home