Wednesday, July 12, 2006

ஐயகோ...!!

ஆங்காங்கே அழுகுரலும்
மரண வலியின் ஓலமும்
சிதறிய உடல்களும்
உறைந்து போன செம்புனலும்
மயிரிழையில் உயிர் பிழைத்த
பதட்டமான முகங்களும்
குண்டு வெடிப்பின் தீவிரத்தை உணர்த்த…
அப்பாவி உயிர்களைப் பலிவாங்கி
காரியம் கைகூடிய மகிழ்ச்சியில்
எங்கோ கொக்கரித்துக் கொள்ளும்
ஈரமில்லா நெஞ்சம் கொண்டவர்களே!!!
த்தூ..!! நீங்கள் வெறும் காட்டுமிராண்டிக் கோழைகள்.

Monday, May 22, 2006

ஜனனம்

என்னைப் பார்த்து
ஒவ்வொரு இரவும் நகைக்கிறது
வாழ்க்கையில் ஒன்றுமே சாதிக்கவில்லை என்று.
இரவுடன் மல்லுக்கட்டி
வாய்ப்பை வாரி வழங்கி
ஆசி தருகிறது ஒவ்வொரு விடியலும்.
எதையுமே புரிந்து கொள்ளாமல்
இயந்திரமாக வேலைக்குச் செல்கிறேன்
கணினியுடன் ஒரு போராட்டம் ஆரம்பிக்க.
களைத்துப் போய் வீடு சேர்ந்து
விடியல் கொடுத்த வாய்ப்பை
MAINFRAMEல் தொலைத்துவிட்டு
தூங்கியும் விடுகிறேன்.
எப்படியேனும் தொலைந்து போ என
விட்டு விலகி 23க்கு வழி விடும்
கடந்து போன 22ஐப் பார்த்து
நான் சொன்னேன் தீர்க்கமாக
"இன்று நான் புதிதாய்ப் பிறந்தேன்".

தேர்தல்

தமிழ்நாட்டைக் கூறு போட்டு விவசாய நிலம்-
இறக்குமதி செய்யப்பட்ட வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டி-
எல்லாமே இலவசம் தான்...
இவர்களின் இலவசத்தால் தோற்றுவிடக்கூடாதென
எதிரணியிலும் இலவசத்திற்குப் பஞ்சமில்லை.
பிரியாணிப் பொட்டலமும் கொஞ்சம் காசும் கிடைப்பதால்
தேர்தல் வந்தால் கொண்டாட்டம்தான் சிலருக்கு.
அவர் மறைந்தாலும் நன்றி மறவா நம் மக்களில் சிலர்
காலம் காலமாக ஓட்டு போடுகின்றனர்
தொப்பி-கண்ணாடி தலைவரின் கட்சிக்கே.
ஒருவர் ஆட்சியில் நாடு வளர்ந்ததை விட
குடும்பம்தான் நிறையவே வளர்ந்தது.
MLAவானால் நல்லது செய்வானா என்று பாராமல்
சாதிக்காரனை ஜெயிக்க வைக்கும் மக்கள் இங்குண்டு.
புலிக்குகையிலிருந்து தப்பிவிட்டதாக நினைத்து
6½ கோடி மக்கள் 70% வாக்குப்பதிவு செய்தனர்
அடுத்த ஐந்து வருடத்திற்கு
சிங்கத்தின் குகையில் இருக்கப்போவதை அறியாமல்.

Tuesday, May 09, 2006

இலக்கணம்

அக்காளின் சுடிதார் அணிந்து
அம்மாவிடம் 'ஸ்பெஷல் க்ளாஸ்' பொய்யோடு
யாருக்கும் தெரியாமல்
முகத்தைத் துப்பட்டாவால் மறைத்துக்கொண்டே
பசை கொண்டு 'பச்சக்' என்று ஒட்டினாற்போல்
ஒருவன் பின் பைக்கில் அமர்ந்து
ECRல் 'விர்'ரென்று மகாபலிபுரம் பறக்கும்
ஒரு நவநாகரிக இளைஞி
மறந்தே போகிறாள்….
துப்பட்டாவோடு கூடவே
பெண்மையின் நாற்பண்புகள் காற்றில் பறப்பதை.

Tuesday, May 02, 2006

புயல்

வருடம் தவறாமல் உருவாகும்
குறைந்த காற்றழுத்தத் தாழியின்போது
நாங்கள் குடியிருந்தது அசோக் நகரில்.

இரண்டு மூன்று நாட்கள் லீவு என்பதால்
புயல் உருவானால் ஒரே குஷி தான்.
புயல் கரையைக் கடக்கும் முன்
பட்டம் செய்து காத்திருப்போம்.
காற்றின் வேகம் கூடக் கூட
வாயுதேவன் மூச்சுக் காற்றாக
'விஷ் விஷ்' சத்தம் கேட்கும்.
ஓடி ஒளிவோம் அவரவர் வீட்டுக்குள்.

புயல் கடந்து முடித்தால்
ஜாலியாகத் தெருவில் ஓடுவோம்
'ஹோ..' என்று கத்திக்கொண்டே.
மரங்கள் ஆங்காங்கே சாய்ந்திருக்க
பயலுகள் எல்லாம் கிளைகளை ஒடித்து
ஸ்டம்ப் செய்வோம் கிரிக்கட் விளையாட.
தெருத்தெருவாக சுற்றி
ஒடிந்து விழுந்த முருங்கையில்
காய்கள் பறித்து வருவோம்.
வருடம் முழுதும் புயல் வராதா
என்று ஏங்குவோம் நாங்கள்.
புயலின் கோரத்தாண்டவம்
யாருக்கும் தெரிவதே இல்லை
கடலோர கிராமங்களைத் தவிர.

புயல் ஓய்ந்த ஒரு நாளில்
நான் நகர்வலம் வந்தபோது
பின்னிய கூந்தலில் கனகாம்பரம் சூடி
மாநிறத்தில் சிலிர்க்கும் தேகத்துடன்
தென்றல் போல் மிக மென்மையாக
அன்ன நடை பயின்று
என்னைக் கடந்தாள் ஒருத்தி
என் மனதில் ஒரு புயலை உருவாக்கிவிட்டு.....