Friday, April 28, 2006

காணாமல் போனவள்

ஐந்தாம் வகுப்பு படித்த காலம்.
வகுப்பில் முதல் மூன்று இடங்களை
லதா,அபி,சரஸ்வதி மூவரும்
பரிட்சை தவணையில்
ஒருவர் மாற்றி ஒருவர்
குத்தகைக்கு எடுத்துக்கொள்ள--
நான் எப்பொழுதும் நான்காவது.

பள்ளி முடிந்த அந்தி வேளையில்
நண்பர்களுடன் ஆட்டம் போட்டுவிட்டு
சரஸ்வதி வீட்டில் ஆஜராவேன்
கணக்கு வீட்டுப்பாடத்தைக் காப்பி அடிக்க.

வீட்டினருகில் இருந்ததால் மட்டுமல்ல
ஏதோ ஒரு பாசம்
என்னை இட்டுச் சென்றது
அவள் வீட்டிற்கு.

மாதம் ஒரு முறையேனும்
'அசோக் நகர்' பூங்காவில்
விளையாட்டு கனஜோராக நடக்கும்.
நொண்டி விளையாட்டின் போது
மயில் போல் வேகமாக ஓடினாலும்
அவளையே துரத்தித் துரத்தி
தொட்டுவிட்டு அவுட் செய்வேன்.

ஒரு நாள் கிரிக்கெட் விளையாடும் போது
நடராசன் பந்தில் 'கோல்டன் டக்' ஆனதை
அந்தப் பக்கம் வந்த சரஸ்வதியிடம் தம்பட்டமடிக்க
அவள் தெரு முனையைக் கடந்தவுடன்
வைத்திருந்த மட்டையால் அவனைச் சாத்தியது
இன்றும் நிழலாடுகிறது என் மனதில்.

அந்த வருடத்திற்குப் பிறகு
குடும்பத்துடன் வேறு எங்கோ சென்றுவிட்டனர்.
என் வாழ்வில் கடந்து போனதற்கு சாட்சியாக
நாங்கள் எடுத்துக்கொண்ட போட்டோவில்
வகுப்பு ஆசிரியை பழனியம்மாள் அருகில்
அப்பழுக்கற்ற புன்னகையை வீசிக்கொண்டிருக்கிறாள்.

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு
ஊர் சுற்றிக் கொண்டிருந்த மாதத்தில் ஒரு நாள்
'அசோக் நகர்' பூங்காவிற்கு சென்றேன்.
குழந்தைகள் உலகத்தின் கவலைகளின்றி
கூடி கும்மாளமிட்டு
நொண்டி விளையாடிக் கொண்டிருந்தனர்.
மனது கடந்த காலத்தை வட்டமிட
நானும் குழந்தையோடு குழந்தையாகி
விளையாட எத்தனித்து
செருப்பைக் கழற்றிவிட்டு நின்றேன்.
ஆனால் நான் துரத்திச் சென்று
அவுட் ஆக்க சரஸ்வதி தான் அங்கு இல்லை...

Thursday, April 27, 2006

பாசம்

தம்பி தங்கையுடன் பிறந்தவர்கள்
முற்பிறவியில் புண்ணியம் செய்தவர்கள்.
எனக்குப் பிறகு மூன்று வருடம் கழித்து
ஒரு குட்டிப் பிசாசு பிறந்தாள்.

அப்பா வாங்கி வரும் கேக்கில்
என் பங்கை நான் தின்றுவிட
அவள் பங்கை ஒளித்து வைப்பாள்
பிறகு எனக்குக் காட்டித் தின்பதற்கு.
சில சமயம் ஒளித்து வைத்ததில்
அவளுக்குத் தெரியாமல்
பாதியை நான் தின்றுவிட
ஒரு மல்யுத்தமே நடக்கும் இருவருக்குள்.

சண்டையில் நான் முரட்டுத்தனமாக
அவள் அழும் வரை அடித்துவிடுவேன்.
காலை எழுந்து பார்த்தால்
பின் விளைவுகளாக என் கையில்
தூங்கும்போது அவள் கிள்ளி வைத்த காயங்கள்.

ஒரு ரூபாய் நாணயத்தில்
HMT சேர்த்தால் வாட்ச் கிடைக்குமென்று
அவள் சேர்த்து வைத்ததை எடுத்து
என் உண்டியலில் போட்ட காலம் உண்டு.

ஒரு முறை வலுத்துவிட்ட சண்டையில்
அவள் 'சொப்பு சாமான்' உடைந்துவிட
அப்பாவிடம் அடி வாங்க வைத்தது
இன்று என் நினைவில் மட்டுமே உள்ளது-
சுகமான வலியாய்.

விவரம் தெரிந்தவுடன் அவள்
என்னிடம் சண்டை போடுவதே இல்லை.
இன்றோ வளர்ந்து ஆளாகி நிற்கும் அவள்
கேட்காமலே என் சட்டையைத் துவைக்கிறாள்.
ஆனால் அவளிடம் நான் எதிர்பார்க்கும்
குழந்தைத்தனம் மட்டும்
எங்கோ சென்று ஒளிந்துகொண்டுவிட்டது.

Friday, April 21, 2006

மாப்பிள்ளை

சகல வசதிதான் என்றாலும்
வாழ்க்கை இனிக்காது பெண்ணே..!
தாபத்தால் தொடும் கணவனும்
பாசத்தை இயந்திரமாகப் பொழிவான்.
கணினியே உலகம் என்றிருப்பவனுக்கு
வீடு தினம் வந்து போகும் வாசஸ்தலம்.
சின்னஞ்சிறு ஊடல் இன்றி
வாழ்வு செல்லும் களிப்பற்ற அமைதியுடன்.
குழந்தை சிரிக்கும் போது
forwardல் வந்த குழந்தையை நினைப்பான்.
இட்லியும் தோசையும் அன்னியமாகும்.
பிட்சாவும் பர்கரும் காலை உணவாகும்.
'வெப்கேம்' காட்டவே செய்யாது
அப்பா அம்மாவின் ஏக்கத்தை.
மகன் வளர்ந்து ஆளானவுடன்
ஒரு நீக்ரோ பெண்ணுடன் குடும்பம் நடத்துவான்
கல்யாணம் செய்து கொள்ளாமலே.
அமெரிக்க மாப்பிள்ளையைத் தெரிவு செய்யும் முன்
நினைவில் கொள்--பணம் மட்டுமே வாழ்க்கையல்ல.
சகல வசதிதான் என்றாலும்
வாழ்க்கை இனிக்கவே செய்யாது பெண்ணே..!

தோன்றும் பொழுது பெற்றோரைப் பார்க்க
குழந்தைகள் பாட்டி மடியில் படுத்துக்
குதூகலமாகக் கதை கேட்க
குடும்பத்துடன் சுற்றுலா செல்ல
இனிக்கும் இந்தியாவை விட்டு
அமெரிக்க மாப்பிள்ளையை மணம் செய்வதும் ஏனோ??
நிம்மதியின்றி உழல்வதற்குத்தானோ..??
இல்லறம் நல்லறமாக நல்ல வரமுமாக
'ஜே' போடுவோம் இந்திய மாப்பிள்ளைக்கு.

Tuesday, April 18, 2006

வறுமை

காலை 9:30க்கு சாவகாசமாக எழுந்து
மெஸ் போய் பார்த்தால்
எனக்குப் பிடிக்கவே செய்யாத பொங்கல்.
வேறு வழியின்றி தட்டில் போட்டு
இரண்டு கவளம் மட்டும்
திக்கித் திணறி சாப்பிட்டு
மிச்சம் முக்கால் தட்டிற்கு மேல் இருக்க
எழுந்துவிட்டேன்..

கல்லூரியில் இருந்த
பற்பல CLUBகளுக்கு மத்தியில்
நான் ஆசைப்பட்டது போட்டோகிராஃப்பி மீது.
புகைப்பட போட்டியின் தலைப்பு--
'வறுமையின் நிறம்'.

'ஹோப்ஸ்' பாலம் பக்கம் சென்றேன்
குடிசை வாழ் மக்களைப் படம் பிடிக்க.
ஒரு சிறுவன் வேடிக்கை பார்த்தான்
கால் சட்டையில் ஓட்டையுடன்.
ஒரு பெரியவர்
அழுக்கேறிய வேட்டியுடன் இருமிக்கொண்டே
குறுக்குச் சந்தில் படுத்திருந்தார்.
அலுமினியத் தட்டில்
பழைய சாதம் சாப்பிட்டாள் ஒருத்தி
வழிந்த மூக்கைத் துடைக்காமல்.
வறுமை அன்றெனக்கு
புதுப்புது உருவத்தில்
பற்பல முகங்களைக் காட்டியது.
மதிய உணவின் போது
காலையில் நடந்ததெல்லாம்
நினைவுக்கு வர
என்றுமில்லாமல் அன்றைக்கு
'கவக் கவக்' என்று அள்ளி அள்ளித் தின்றேன்.
கண் கலங்கியதைக் கண்டு
'என்ன ஆச்சுடா மாப்ள'-- கேட்ட நண்பனிடம்
சலனமில்லாமல் பொய் சொன்னேன்
'மொளகா கடிச்சிட்டண்டா......'

பார்வை

சொந்த பந்தமெல்லாம் குழுமியிருக்க
பெயர் சூட்டு விழா நடந்தது.
முப்பாட்டனின் மூக்கு இருந்ததால்
அவர் பெயரை வேண்டினார் ஒருவர்.
சிரிப்பழகு பாட்டியைப் போல் இருந்ததால்
பாட்டி பெயர் வேண்டினாள் பெற்றெடுத்தவள்.
பொறுக்க முடியாத அவள் மாமியார் சொன்னார்
'அப்பனை உரிச்சு பொறந்துருக்கான்'.
சிணுங்க ஆரம்பித்து
அழத் தொடங்கியது குழந்தை.

குழந்தைக்குப் பால் கொடுக்கும் ஒருத்தியின்
கொஞ்சம் வெளியே தெரியும் தனம்--
தாய்மையின் அழகு ஒருவனுக்கு;
இன்னொருவனுக்கு அது விரசம்...ம்ம்
பார்வை எப்படியெல்லாம் வித்தியாசப்படுகிறது...??

ஆளாளுக்கு அவரவர் விருப்பம் சொல்ல
குழந்தையைக் காண ஓடோடி வந்து
அதைக் கையில் எடுத்த தகப்பன்
முகம் வெளிறிப் போய் நின்றான்..
திருமணம் முன் காதலித்து
ஏமாற்றியவளின் முகச்சாடையைக் கண்டு.
கேலி செய்வது போல்
குழந்தை சிரித்தது இப்போது.

Monday, April 10, 2006

நடக்காது என்றாலும்

ஊழல் இல்லாத இந்தியாவின்
வளர்ச்சியடைந்த மாநிலமாக பீகார்
உரிமம் இல்லாமல்
மாட்டும்போது லஞ்சம் வாங்கா போலீஸ்
சாதிகளின் பெயரால்
வெட்டிக்கொண்டு சாகாத மக்கள்
அரசியல் 'அம்மா'
ஒரு நாள் என் காலில் விழும் சந்தர்ப்பம்
இளையராஜா இசையில்
சினிமாவில் பாடல் பாட ஒரு வாய்ப்பு
'கோடிங்' செய்து
சம்பளம் வாங்கும் ப்ராஜக்ட் லீட்
மனைவிக்குத் தெரியாமல்
சின்ன வீடாக ஐஸ்வர்யா ராய்
மணமாகா அலுவலகக் கன்னியர்கள்
வெள்ளிக்கிழமை ஒருநாள் தாவணியில்
தெய்வீக அழகின்
திருவுருவமான M.S.ன் சீடனாக நான்

இதுபோல் எவ்வளவோ
நடக்காது என்றாலும்
ஆசைப்படாமல் இருப்பதில்லை மனது.

Friday, April 07, 2006

சாயம் போன கலர் கனவுகள்

எனக்கு மீசை அரும்பியிருந்த நேரம்.
ஷேவ் செய்தால் நன்றாக வளரும் என்று
நண்பன் சொல்லக் கேட்க
யாருக்கும் தெரியாமல்
அப்பாவின் ரேசரால் மீசையை மழித்து
நான் திட்டு வாங்கியபோது எனக்கு வயது 15.

பத்தாம் வகுப்பில் ஒரு நாள்
ஆங்கில ஆசிரியை அனிதா மேரி
ஒரு பெயரை உச்சரிக்க
'யாரடா அது...?' என்று திரும்பினேன்.
கனவுகள் கலர் கலராய் விரிந்தது அன்றிரவு.
காலையில் கண்ணாடி முன் நின்றால்
'அம்மை'யின் தழும்பு கூட அழகாக இருந்தது.

நண்பர்கள் எனக்கும் அவளுக்கும்
FLAMES போட்டுப் பார்த்து
‘L’ வந்ததால் பொதுமாத்து போட்டதில்
இரண்டு நாட்களாய் வலித்தது எனக்கு.

சைக்கிள் ஓட்டும்போது
அவள் எதிரில் வர
'பிலிம்' காமிக்கலாம் என்று
இரு கைகளையும் விட்டுவிட்டு
விழுந்து வாரியது
முட்டியில் விழுப்புண்ணின் தழும்பாக.


பொதுத் தேர்வுக்கு முன்
அனைவரும் சாமி கும்பிட
'சித்தானந்த சுவாமி' கோயிலுக்குச் சென்றோம்.
ஆளாளுக்கு நந்தியின் காதில் சொல்ல
நானும் என் பங்குக்கு
எங்கள் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டினேன்
அவளை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே.

அறியாப் பருவத்தில்
அவளால் பரவசமடைந்ததை
காதல் என்றெண்ணிய என் மடத்தனத்திற்கும்
என் செய்கைகளையெல்லாம்
சிலிர்ப்படைந்து ஆமோதிப்பது போல்
புன்னகை புரிந்த அவள் செயலுக்கும்
காலம் தான் காரணம் வைத்துள்ளது.


இன்றும் அவளது நினைவுகள்
என் மனதின் மூலையில் ஒட்டிக் கொண்டிருக்கிறது
ஒன்றுக்கும் உதவாத ஆறாவது விரல் போல்.
மனம் அமைதியற்று இருக்கும் வேளைகளில்
அக்கோயிலுக்குச் சென்று வருகிறேன்....ஆனால்
நந்தியின் காதில் மட்டும் எதுவுமே சொல்வதில்லை.