பாசக்காரப் பசங்க
நிச்சயம் முடிந்த கையுடன்
அவளைத் தொடர்பு கொள்ளக் கூடாதென்று
தடை விதித்தார் அப்பா.
அவளது கிராமத்தில்
தொலைக்காட்சியே ஒன்றிரண்டு வீட்டில் தான்..
அப்புறம் செல்லிடப் பேசிக்கு எங்கே செல்வது.....??
வீட்டுக்குத் தெரியாமல்
ஒரு கூடை நிறையக் கனிகள் கொண்டு
எங்கள் மரத்தில் கனிந்ததென்று
மாமா நம்பும்படியாகவே பொய்யைச் சொன்னேன்.
கூடையைத் தூக்க வந்தவளுக்கு
கண்சாடை காட்டிவிட்டு அரைமணியில் கிளம்பிவிட்டேன்.
என் சைகை புரிந்திருந்தால்
4 மணிக்கு ஊர் எல்லைக் கிணற்றடிக்கு வரவேண்டும்.
ம்ம்...என்ன செய்வது…??.... அவள் பட்டிக்காடு.
கிணற்றின் விளிம்பில் நின்று
கல்லெறிந்தேன் அலைகளை உருவாக்க.
என் கண்களை யாரோ பின்னிருந்து பொத்த
வந்தது அவள்தானென்று காட்டிக் கொடுத்தது
அவள் கைகளின் மென்மை.
அவளின் சாதுர்யத்தை வியந்து கொண்டே திரும்புகையில்
சிறு கல் விழுந்தது என் தலையில்.
யாரென்று மேலே பார்ப்பதற்கும்
அவள் பதறியடித்து ஓடுவதற்கும் சரியாக இருந்தது.
அங்கே மரத்தின் மேல்
மாங்காயைக் கடித்துக்கொண்டு
காலை ஆட்டியபடியே சிரித்தனர்-
என் நண்பர்கள்.
என் செய்வேன் நான்….??
"பாசக்காரப் பசங்க" என்று நொந்துகொள்ளத்தான் முடிந்தது.

0 Comments:
Post a Comment
<< Home