Tuesday, March 28, 2006

பயணம்

கத்திரி வெய்யிலின் உக்கிரம்
என் மண்டையைப் பிளக்க
சென்னை செல்வதற்கு
புதுவை பேருந்து நிலையத்தில் நின்றேன்.
ECR பலகையுடன் ஒன்று உள்ளே வர
தேன் கூட்டைச் சுற்றி மொய்க்கும்
தேனீக்கள் போல்
பேருந்தைச் சுற்றி மக்கள் கூட்டம்.
அடித்துப் பிடித்து ஏறும் முன்
கைக்குட்டையும் பைகளும் இருக்கைகளில்.
என் திறமையை நொந்து கொண்டே
நிற்கலானேன் இடிபாடுகளுக்கிடையில்.

கூட்டம் பிதுங்கி வழிந்தது.
பாதி தூரம் செல்லும் முன்
2 வயது குழந்தை வீறிட்டு அழ
காரணம் புரியாமல் தாய் பரிதவிக்க
'ஒன்று'க்குச் சென்றுவிட்டு ஓய்ந்தது அது.
குழந்தை என்று கூட பாராமல்
அணிந்த T-சர்ட்டில் கொஞ்சம் பட்டுவிட்டதால்
திட்டித் தீர்த்தான்
3 குழந்தைக்குத் தகப்பன் போலிருந்தவன்.

சிறிது நெரம் கழித்து
அரும்பிய மீசையின் வேகத்தில்
கூட்டத்தைப் பகடையாக்கிய ஒருவனை
வெகுண்டெழுந்த ஒரு புதுமைப் பெண்
'பளார்' என்று விட்டாள் ஒன்று.

திடீரென்று படிகளின் பக்கம்
'க்வாக்…..' என்ற சத்தம்.
சாம்பார், ரசம், தயிர் கலந்த
ஒரு ‘modern painting’ .

அனல் காற்றின் வெம்மை
அனைவரது முகத்தில் வியர்வையானது.
'தண்ணீர் தண்ணீர்' என்று ஒருவன் கதற
காதில் வாங்காதது போல் சிலரும்
வைத்துக்கொண்டே கையை விரித்த பலரும்
'மனித நேயம்' செத்துப் போனதைப் பறைசாற்றினர்.
மயங்கி விழப்போனவனுக்கு
ஒரு வயதான முதியவர்
கொஞ்சம் புழுதி படிந்த பாட்டிலை நீட்ட
வாங்கி 'மடக் மடக்' என்று நொடியில் குடித்துவிட்டு
நன்றி சொல்ல வார்த்தை எழாமல்
தடாலென்று காலில் விழுந்தான் அவன்.

மானுடம் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு
சாட்சியானார் அப்பெரியவர்.
ஆமோதிப்பதாகவே 'சட சட' வென
கொட்ட ஆரம்பித்தது மழை.

0 Comments:

Post a Comment

<< Home